துரதிர்ஷ்ட வசமாக பெரும்பான்மையான இந்தியர்கள் ஒடியாடிச் செயல்படாது ஒரிடத்தில் இருப்பதற்கே விரும்புகின்றனர். அதிக உடலுழைப்பு இல்லாதவர்கள், உட்கார்ந்து வேலை செய்பவர்கள், நோய் எதுவும் இல்லாதிருப்பது தான் ஆரோக்கியம் என்று இவர்கள் கருதுகின்றனர். இந்தச் சிந்தனை தவறானது. நோய் இன்றி இருந்தால் மட்டும் உடல் நலத்துடன் இருப்பதாகப் பொருளில்லை. கீழ்க்கண்ட கேள்வியை உங்களுக்கு நீங்களே கேட்டுப்பாருங்கள்.
சிறுகுன்று ஒன்றின் உச்சியை நடந்து சென்று அடையச் சொன்னால் உங்களால் எளிதாக முடியுமா அல்லது மூச்சு வாங்குவீர்களா?
மூச்சுத் திணறல் இன்றிப் 10 நிமிட நேர மெல்லோட்டத்தில் உங்களால் ஈடுபட முடியுமா?
பெரிய முயற்சி எதுவுமின்றி 100 முறை ஸ்கிப்பிங் செய்ய இயலுமா?
காலையில் கொட்டாவி விட்டபடி படுக்கையிலிருந்து எழாமல் உற்சாகத்துடன் எழுந்து காலைப் பொழுதை வரவேற்கிறீர்களா?
காலையில் இருக்கின்ற புத்துணர்ச்சியுடனும் உற்சாகத்துடனும் மாலை வரை செய்படுகிறீர்களா? அல்லது பிற்பகலில் சோர்வுக்கு ஆளாகிறீர்களா?
இவை ஐந்திற்கும் உறுதியான உடன்பாடான பதிலைச் சொன்னால் உங்கள் உடல் நலம் சிறப்பாக இருக்கிறது என்று கொள்ளலாம். இல்லையெனில் உங்கள் உடல் நலத்தை மேம்படுத்தும் முயற்சிகளை உடனே மேற்கொள்ளுங்கள்.
நம்மில் பெரும்பான்மையோர் நடைமுறை வாழ்க்கையில் குனிந்தும், நிமிர்ந்தும், நடந்தும் செயல்படுகிறோம் என்றாலும் இதுவே முழுமையான உடற்பயிற்சியாகி விடாது. உடல் நலத்தை மட்டும் கருத்தில் கொண்டு விரைந்தும் தொடர்ந்தும் செய்யப்படும் பயிற்சிகளினால் தான் உடல் திறனும் செயல்திறனும் கூடுகிறது. அடிப்படைத் தேவைகளுக்காக நம் உடல் தோற்றுவிக்கும் சக்திக்கும், உடற்பயிற்சியினால் நாம் பெறுகின்ற உயரளவு சக்திக்கும் உள்ள வேறுபாடே நமது உடல் நல ஏற்றமைவு ஆகிறது.
எனவே அதீதமான களைப்பு எதுவுமின்றி ஓரளவு நீண்ட நேரத்திற்கு மெல்லோட்டம், நடைப்பயிற்சி, நீச்சல், கயிறு தாண்டுதல், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுகின்ற திறனே நமது உடல் நலம் பெறுவதற்கு உடலுள் உறுப்புக்களான நுரையீரல், இதயம், சிறுநீரகங்கள், இரத்த நாளங்கள் அனைத்தும் திறம்படச் செயல்பட வேண்டும். இந்த உடல் நலம் மனிதருக்கு மனிதர், அவர்களது வயது, வாழ்க்கை முறை போன்றவற்றைப் பொருத்து மாறக்கூடியது.
உடல் நலம் உயர்த்துகின்ற வகையில் நாம் செய்கின்ற உடற்பயிற்சிகள் நமது உடலின் சக்தியையும், திறத்தையும் மேம்படுத்தி, நீடித்துழைக்கும் ஆற்றலைத் தந்து, வேலைப்பளுவையும் உடல் நோயையும் தாங்கிப் பொறுத்துக் கொள்ளும் பொறுமையையும் தருவதாக அமைய வேண்டும்.
உடல்நலத்தை உயர்த்த வேண்டிச் செய்யப்படுகின்ற பயிற்சிகளை இளம் வயதிலேயே தொடங்குவது சிறந்தது. உடற்பயிற்சியின் அவசியத்தைச் சிறு குழந்தைகளுக்கு நாம் உணர்த்த முயல வேண்டும். ஆனால் நடைமுறையில் பல பெற்றோர்கள் இது பற்றிக் கவலைப்படுவதில்லை. படி, படி என்று தங்கள் பிள்ளைகளைப் படுத்துகின்றவர்கள் அதில் பத்தில் ஒரு பங்கு கூட ஒடியாடி விளையாடு என்று கூறுவதில்லை.
உடற்பயிற்சியின் தேவையும் அளவும் மனிதருக்கு மனிதர் மாறுபடுகிறதென்று முன்னரே குறிப்பிட்டோம். ஒவ்வொருவரும் தங்களது வயதுக்கும் வாழ்க்கை முறைக்கும் ஏற்றவாறு உடற்பயிற்சிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ளாமல் சைக்கிள் விடுதல், நடைப்பயிற்சி, எளிய உடற்பயிற்சிகள் போன்றவற்றில் ஈடுபடலாம். அதே நேரத்தில் வயதின் காரணமாக உடற்பயிற்சியை ஒதுக்குவதும் அறிவுடைமை ஆகாது. இன்னும் குறிப்பாகச் சொல்லப் போனால் இதயக்கோளாறு, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களை உடற்பயிற்சியின் மூலம் வராமல் இருக்கவும், ஒரே வழி வந்தால் அவற்றைக் கட்டுப்படுத்தவும் இயலும்.
இது தவிர உடற்பயிற்சிக்கும் மனநலத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதென்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்கள் உடல் நலத்துடன் மனநலமும் அமையப் பெறுகின்றனர். இவர்களது பழகு முறையும், நட்புத் திறமும், நினைவாற்றலும், சிறப்பாக இருக்கக் காண்கிறோம். எனவே இன்றே, இப்போதே உங்களுக்கென்று ஒரு பயிற்சித் திட்டத்தை வகுத்துக் கொண்டு செயல்படத் தொடங்குங்கள்.
ஆயுர்வேதம்.காம் ஜனவரி 2011
No comments:
Post a Comment