ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகி, உடல் செல்கள் இந்த சர்க்கரையை பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலை தான் சர்க்கரை வியாதி. நீரிழிவு வியாதி, மதுமேஹம், டயாபடீஸ், டயாபடீஸ் மெலிடஸ் என்று பல பெயர்களால் அழைக்கப்படும் வியாதி. இரத்தத்தில் உள்ள குளூக்கோஸ் தான் சர்க்கரை என்று அழைக்கப்படுகிறது. உடலில் தேவையான அளவு ‘ இன்சுலின்’ என்ற ஹார்மோன் சுரக்காததால், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகும். சிறுநீரிலும் அதிகமாக காணப்படும். கணையம் உற்பத்தி செய்யும் இன்சுலின் இல்லாவிடில் உடலுக்கு அத்தியாவசிய தேவையான குளுக்கோஸ் எரிசக்தி, செல்களை சென்று அடையாது. வளர்சிதை மாற்ற கோளாறுகள் மெட்டாபாலிஸம் மற்றும் குறைபாடுகளும் இத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
நீரிழிவு வியாதி பணக்காரர்களின் வியாதி என்று கருதப்பட்ட காலம் உண்டு. உண்மை என்னவென்றால், உணவும் உடல் உழைப்பும் சம்பந்தபட்ட வியாதி டயாபடீஸ். ஆசிய தேசங்களில் பரம்பரையாக கார்போஹைட்ரேட்ஸ் செறிந்த உணவுகளையே அதிகம் உண்பார்கள். “சோற்றால் அடித்த சுவர்” என்பது போல் அரிசி, கோதுமை போன்றவற்றை அதிகம் சேர்த்து கொள்பவர்கள். சீக்கிரம் ஜீரணமாகும் இந்த உணவுகள் குறுகிய நேரத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து விடும். இதற்கேற்ற உடல் உழைப்பு இல்லாவிடில், தேங்கி விடும் குளுக்கோஸ் வியாதியாகிறது.
மேலை நாடுகளில் புரதம் செறிந்த உணவையே அதிகம் உண்பவர்கள் ஆனால் பண வசதி பெருகி, உல்லாச வாழ்க்கை அதிகமாக, அவர்களின் உடல் உழைப்பு குறைந்து, உடல் குண்டாவது சகஜமாகிவிட்டது. வாழ்க்கை தரம் உயர்ந்த போதிலும், உடல் குறைகள் குறைவதில்லை. செல்வ வாழ்க்கை டயாபடீஸ் ஆக மாறுகிறது.
ஆரோக்கியமான மனிதருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு ஒரு நாளில் சிறிதளவு மாறுபட்டுக் கொண்டே இருக்கும். சாப்பிட்ட உடன் அதிகமாகும். சாப்பிட்ட 2 மணி நேரத்தில் “நார்மல்” ஆகிவிடும். நார்மல் நிலைக்கு வந்தவுடன் இன்சுலின் உற்பத்தி நின்று விடும். இந்த மாறுதல்கள் குறுகிய அளவில் – 70 லிருந்து 110 மி.கி / டெசிலிட்டர் – வரை இருக்கும். உங்கள் உணவில் மாவுச்சத்து அதிகமாக இருந்திருந்தால், சர்க்கரை அளவு அதிகமாகும். 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சாப்பிட்டவுடன், சர்க்கரையின் அளவு மற்றவர்களைவிட சிறிது அதிகம் இருக்கும்.
No comments:
Post a Comment