நீரிழிவு நோயும், மனச்சோர்வும், ஒன்றுக்கொன்று ‘உதவும்’ குணமுடையவை. நீரிழிவு, மனச்சோர்வை வரவேற்று வளர்க்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு மனச்சோர்வு வரும் வாய்ப்புகள், சாதாரணமான மனிதர்களை விட, இரண்டு மடங்கு அதிகம். மனச்சோர்வு, நீரிழிவு வியாதிக்கு அடிகோலும். நீரிழிவு அதிகமானால் மனச்சோர்வும் கூடவே அதிகரிக்கும். சமீபத்திய ஆராய்ச்சிகள், மனச்சோர்வுக்கும், நீரிழிவு நோயுக்கும் உள்ள தொடர்பை நிரூபிக்கின்றன. இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளில் 30% மனச்சோர்வினால் பாதிக்கப்படுகின்றனர்.
மனச்சோர்வு என்றால் என்ன?
அதீதமான, தீவிரமான, சோக உணர்வுகள். எப்போதும் வருத்தப்பட்டுக் கொண்டு துக்கம் காப்பது.
வாழ்வில் எத்தனையோ ஏற்ற தாழ்வுகள் நடக்கின்றன. துக்கச் சம்பவங்கள் நிகழ்கின்றன. உற்றார், உறவினர்களின் இழப்பு, வேலை இழத்தல், விவாகரத்து, வியாபார தோல்வி, பணக் கஷ்டம் இவையெல்லாம் மன வருத்தத்தை உண்டாக்கும். இந்த துக்கம் அதிக நாள் நீடித்தால், மனச் சோர்வு உண்டாகும்.
அறிகுறிகள்
• தொடர்ந்து துக்கமாகவே இருப்பது, விரக்தி
• தன்னம்பிக்கை இழத்தல், தன்னை தானே சாடிக் கொள்வது, குற்ற உணர்வு, தான் ஒன்றுக்கும் உதவாதவன், கையாலாகாதவன் என்று வருத்திக்கொள்ளும் மனப்பான்மை
• நன்மையில் நம்பிக்கை இன்மை, தீமையே ஏற்படும் என்று எதிர்பார்க்கும் சுபாவம், எல்லாம் கெட்டவை என்ற எண்ணம்.
• எதிலும் நாட்டமின்மை, பாலுணர்வு இல்லாமல் போதல்
• முடிவுகள் எடுக்க முடியாமை, அதீத களைப்பு, சோர்வு, சக்தியின்மை,
• எப்போதும் எரிச்சல் வருவது, நரம்புத் தளர்ச்சி
• தற்கொலை எண்ணங்கள், ‘உலகே மாயம், வாழ்வே மாயம்’ என்ற எண்ணங்கள்
• உடல் உபாதைகள், மருந்து கொடுத்தாலும் தணியாத நோய்கள்.
• பசியின்மை இல்லை அதிகமாக சாப்பிடுவது.
• தூக்கமின்மை.
சர்க்கரை வியாதிக்கும், மனச்சோர்வுக்கும் உள்ள தொடர்புகள்
டயாபடீஸ் ஒரு சிக்கலான வியாதி. அதை சமாளிக்க பல வழிகளில் போராட வேண்டும். பத்திய உணவு, மருந்துகளை தினமும் உட்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம், போன்ற நியமங்கள் சலிப்பையும், விரக்தியையும் உண்டாக்கும். தவிர உடல் ரீதியாக நரம்புகளை நீரிழிவு தாக்கி சேதமுண்டாக்கும். டயாபடீஸ் வாழ்க்கை தரத்தை குறைத்து விடுகிறது.
ஆயுர்வேதம், வாத, கப தோஷங்களின் மாற்றங்களால் மனச்சோர்வு வரும் என்கிறது. கப உடம்புகாரர்களுக்கு வரும் மனச்சோர்வு அவ்வளவு தீவிரம் இல்லை. மனச்சோர்வை போக்க
1. இலேசான உணவுகள், தவறாமல் உடற்பயிற்சிகள், உணவில் அதிக காய்கறிகளை சேர்த்துக் கொள்வது.
2. சரியான உணவுமுறை, உடற்பயிற்சி, தியானம், யோகா, பிராணயாமம் இவை பலன் தரும்.
3. நல்ல சிந்தனைகளை வளர்த்து, எதிர்மறை எண்ணங்கள் வராமல் தடுக்க, முயற்சிக்க வேண்டும். அப்யங்கம் (மசாஜ்), சிரோதாரா (நெற்றிப் பொட்டில் விடப்படும் தைல சிகிச்சை) சிகிச்சைகள் உடலை குளிர்வித்து, வாதத்தை நிலைக்கு கொண்டு வரும்.
4. ஜடமான்சி, ப்ரம்மி போன்ற மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட ஆயுர்வேத மருந்துகள் குணம் தரும். ஆயுர்வேத வைத்தியரை அணுகவும். பிரம்மி வடி, பிரம்மி கிருதம் போன்ற மருந்துகள் நல்ல பலனைத் தரும்.
No comments:
Post a Comment